உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் ஆடிவருகின்றன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாகவே உள்ளன. ஸ்மித் மற்றும் வார்னர் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது. நியூசிலாந்து அணியும் அபாரமாக ஆடிவருகிறது. வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், சாண்ட்னெர் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அபாரமாக ஆடுகின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா, இங்கிடி, ஸ்டெய்ன் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அபாரமாக உள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்டாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. எனவே உலக கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. 

உலக கோப்பையை எந்த அணி வெல்லும், எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், உலக கோப்பை குறித்து டுவீட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளார்.