கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. 

ஆனால் கொரோனாவால் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் திட்டமிட்டபடி நடத்தமுடியாத சூழல் உருவானது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்லை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியில் பிசிசிஐ இருந்தது. பொருளாதார ரீதியாக வலுவான கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யை எதிர்த்து எந்த கிரிக்கெட் வாரியமும் எதுவும் செய்ய முடியாது. அந்தவகையில், ஆசிய கோப்பை தொடர் ரத்தானது; டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல்லை செப்டம்பர் - நவம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் அதற்கு, அக்டோபரில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை இடைஞ்சலாக இருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பையை ஓராண்டு ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்ததையடுத்து, ஐபிஎல் நடத்துவது உறுதியானது. 

ஐபிஎல் செப்டம்பர் 26 தொடங்கப்படலாம் என்ற கருத்து நிலவிவந்தது. இந்நிலையில், ஐபிஎல் செப்டம்பர் 19  முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முழு போட்டி அட்டவணை தயார் செய்து அறிவிக்கப்படும். ஐபிஎல் நடப்பது உறுதியாகி, தேதியும் அறிவிக்கப்பட்டதால், கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.