ராகுல் சதமடித்த பின்னர், வெளிப்புற கூச்சல்களுக்கு செவிமடுக்கமாட்டேன்; அது தேவையும் இல்லை என்கிற ரீதியில் காதுகளை பொத்திக்கொள்கிறார். அது ஏன் என புரியவே இல்லை என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகின்றன.
கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலில் கேஎல் ராகுலின் கேப்டன்சியில் ஆடிவரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அருமையாக ஆடி 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 199 ரன்களை குவித்த லக்னோ அணி, மும்பை இந்தியன்ஸை 183 ரன்களுக்கு சுருட்டி, 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 60 பந்தில் 103 ரன்களை குவித்தார்.
சதமடித்த ராகுல், வழக்கம்போலவே இரு கைகளாலும் இரு காதுகளை பொத்தி அவரது சதத்தை கொண்டாடினார். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் கேஎல் ராகுல் பேட்டிங்கில் திணறிக்கொண்டிருந்தபோது அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில் இந்தியாவிற்காக ஆடிய ஒரு போட்டியில் சதமடித்த ராகுல், வெளிப்புற விமர்சனங்கள், சத்தங்கள் என் காதில் விழுவதில்லை என்கிற வகையில் இரு காதுகளையும் அடைத்து சதத்தை கொண்டாடினார்.
அதன்பின்னர் ஒவ்வொருமுறையும் சதத்தை அந்த முறையிலேயே கொண்டாடுகிறார். இந்நிலையில், சதமடித்த பின் ஏன் ராகுல் இப்படி கொண்டாடுகிறார் என்று புரியவில்லை என சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ராகுல் ஏன் இப்படி செய்கிறார் என்று எனக்கு புரியவே இல்லை. சதமடித்த பின், வெளிப்புற சத்தங்களை புறக்கணிக்கும் வகையில் செய்கை செய்கிறார். சதமடித்த ஒரு வீரரை பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து பாராட்டத்தான் செய்வார்கள். சதமடித்த வீரர் அந்த கைதட்டல்களையும், பாராட்டுகளையும் காது கொடுத்து கேட்டு மகிழ வேண்டும். அவர்கள் உங்களுக்குத்தான் கைதட்டுகிறார். ஆனால் அப்போது ஏன் அவர் இப்படி செய்கிறார் என்பது எனக்கு புரியவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
