ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் இஷான் கிஷன் ரூ.15-17 கோடிக்கு விலைபோவார் என அஷ்வின் ஆருடம் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்கவுள்ளது.

ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன. 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக எடுத்தன. 

மெகா ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர் என பெரிய வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருப்பதால் இந்த சீசனுக்கான ஏலம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர்களில் ஒருவராக இஷான் கிஷன் இருப்பார் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் ஆடிவந்த இஷான் கிஷன் ஐபிஎல்லில் 61 போட்டிகளில் ஆடி 1452 ரன்கள் அடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் முக்கியமான வீரராக திகழ்ந்துவந்த இஷான் கிஷனை, 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் மும்பை அணியால் தக்கவைக்கமுடியவில்லை.

ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்கு முனைப்பில் மும்பை அணி இருக்கிறது. இந்நிலையில், அவர் ரூ.15-17 கோடி என்ற மிகப்பெரும் தொகைக்கு விலைபோவார் என்று அஷ்வின் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன் வியக்கத்தகு ஆப்சனாக இருப்பார். மும்பை அணி அவரை மிடில் ஆர்டர் வீரராக பயன்படுத்தியது. அவர் 3-இன் - 1 வீரராக இருப்பார். விக்கெட் கீப்பருக்கு எப்போதுமே ஒரு மதிப்பு இருக்கிறது. விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் மிடில் ஆர்டரிலும் ஆடுவார்; டாப் ஆர்டரிலும் ஆடுவார். மற்றுமொரு விஷயம் அவர் இடது கை பேட்ஸ்மேன். சொல்லப்போனால் இஷான் கிஷன் 5 - இன் - 1 வீரர் ஆவார். விக்கெட் கீப்பர் - மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் - டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் - இடது கை பேட்ஸ்மேன் என 4 வெரைட்டிகளுடன், அவர் நன்றாக ஸ்லெட்ஜ் செய்வார் என்பதால் அது 5வது தன்மை. ஸ்டம்ப்புக்கு பின்னால் நின்றுகொண்டு ரிஷப் பண்ட்டைவிட நன்றாக ஸ்லெட்ஜ் செய்யக்கூடியவர் இஷான் கிஷன் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.