பஞ்சாப் கிங்ஸ் அணி மயன்க் அகர்வாலை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்கவுள்ளது.

இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு அணியும் தலா ரூ.90 கோடி செலவு செய்யலாம். ஆனால் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக 8 பழைய அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்பதால், அந்த அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கு ஒதுக்கிய தொகை போக, மீதத்தொகை அணிகளின் கையிருப்பில் இருக்கும். அதேபோல 2 புதிய அணிகளும், அவை ஏலத்திற்கு முன் எடுத்த 3 வீரர்களுக்கு அந்த ரூ.90 கோடியில் ஒதுக்கிய தொகை போக மீதத்தொகை அந்த அணிகளின் கையிருப்பில் இருக்கும்.

இந்த மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ஹோல்டர் ஆகிய கேப்டன்சிக்கு தகுதியான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய அணிகள் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணி, மயன்க் அகர்வாலை ரூ.14 கோடிக்கும், அர்ஷ்தீப் சிங்கை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்தது. அந்த அணியை கேப்டனாக இருந்து வழிநடத்திவந்த ராகுலை விடுவித்தது. ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக ரூ.72 கோடியை கையிருப்பில் வைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. எனவே அந்த அணி விரும்பும் வீரர்களை அந்த அணியால் ஏலத்தில் எடுக்க முடியும்.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிதாக ஒரு கேப்டனை நியமிக்கக்கூடாது. மயன்க் அகர்வாலை கேப்டனாக நியமித்து, அவருடன் ஆலோசித்து அதன்படி வீரர்களை தேர்வு செய்து அணியை கட்டமைக்க வேண்டும். கேப்டனின் ஆலோசனை இல்லாமல் புதிய ஒரு கேப்டனின் கீழ் ஒரு அணியை கட்டமைப்பது சரியாக இருக்காது. பஞ்சாப் அணியின் பெரிய பலமே பணம் தான். அந்த அணியிடம் கையிருப்பில் அதிகமான தொகை உள்ளது. எனவே அந்த அணி விரும்பும் வீரரை எடுத்து மயன்க் அகர்வாலின் கேப்டன்சியில் அணியை கட்டமைக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.