சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய ஜெர்சி கிட்டை ரசிகர்கள் பயங்கரமாக கிண்டலடித்துவருகின்றனர்.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்கவுள்ளது.
ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன. 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக எடுத்தன.
மெகா ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர் என பெரிய வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருப்பதால் இந்த சீசனுக்கான ஏலம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய அணிகள், அவற்றின் பெயர்கள், லோகோக்களை வெளியிட்டுவருகின்றன. பழைய அணிகளும் சில அப்டேட்டுகளுடன் 15வது சீசனை ஃப்ரெஷ்ஷாக எதிர்கொள்ளும் முனைப்பில் உள்ளன. அந்தவகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய ஜெர்சி கிட்டை வெளியிட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், உம்ரான் மாலிக் ஆகிய மூவரை மட்டுமே தக்கவைத்தது. வில்லியம்சன் தலைமையில் புதிய அணியை கட்டமைக்கவிருக்கும் சன்ரைசர்ஸ் அணி, இந்த மெகா ஏலத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறது.
இதற்கிடையே, முழுக்க முழுக்க ஆரஞ்ச் நிறத்தில் புதிய ஜெர்சி கிட்டை வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சி கிட்டுடன் தான் அந்த அணி இந்த சீசனில் ஆடவுள்ளது. அதை டுவிட்டரில் வெளியிட்டநிலையில், அதைக்கண்ட ரசிகர்கள், அந்த ஜெர்சி கிட்டை பிக்பேஷ் லீக் அணியான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியுடன் ஒப்பிடுவதுடன், அந்த ஜெர்சி படுமோசமாக இருப்பதாக டுவிட்டரில் கிண்டலடித்துவருகின்றனர்.
