முகமது ஷமியை சீனியர் வீரர் என்று கூட பார்க்காமல் ஹர்திக் பாண்டியா களத்தில் திட்டிய சம்பவம் ரசிகர்களை அதிருப்தியடைய செய்ததுடன் ஹர்திக் பாண்டியாவை நெட்டிசன்கள் விளாசுகின்றனர்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸுக்கு எதிராக முதல் தோல்வியை அடைந்தது.
இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக விளையாடி 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்திவந்த நிலையில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸிடம் தோல்வியடைந்தது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவின்(50*) அரைசதத்தால் 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.
163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி கேன் வில்லியம்சனின் பொறுப்பான அரைசதத்தால் (57) கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் 3 போட்டிகளிலும் சிறப்பாக கேப்டன்சி செய்த ஹர்திக் பாண்டியா, சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சரியாக செயல்படவில்லை. அவருக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும்போது உற்சாகமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, நெருக்கடியான சூழல்களில் பொறுமை இழக்கிறார். கேன் வில்லியம்சன் அரைசதம் தான் குஜராத் டைட்டன்ஸிடமிருந்து போட்டியை பறித்தது. ஆனால் கேன் வில்லியம்சனை அரைசதம் அடிக்கவிடாமல் முன்பே வீழ்த்தியிருக்கலாம். ஆனால் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா டி.ஆர்.எஸ் எடுக்க மறுத்ததால் வில்லியம்சன் அவுட்டாகாமல் தப்பித்து அரைசதம் அடித்தார். அதுவும் குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்டியா 42 பந்தில் 50 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது மெதுவான பேட்டிங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி பெரிய ஸ்கோரை பதிவு செய்யமுடியாமல் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
ஆனால் ஹர்திக் பாண்டியா சன்ரைசர்ஸுக்கு எதிராக தோல்வி முகத்தை எட்டும் பயத்திலும், பதற்றத்திலும் அணி வீரர்களை தாறுமாறாக திட்டினார். சாய் சுதர்சன் வேகமாக ஃபீல்டிங் செய்யாமல், 2 ரன்கள் எடுக்க அனுமதித்ததால் அவரை திட்டினார் ஹர்திக் பாண்டியா. அதேபோல கேட்ச்சை பிடிக்க தவறியதற்காக சீனியர் வீரர் என்று கூட பார்க்காமல் முகமது ஷமியை திட்டினார். ஷமி என்ன செய்வதென்றே தெரியாமல் விரக்தியிலும் அதிருப்தியிலும் நின்றார்.
ஹர்திக் பாண்டியாவின் அத்துமீறிய செயல் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது. உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பரோடா அணியின் கேப்டன் க்ருணல் பாண்டியா, அவரது அணியில் ஆடிய தீபக் ஹூடாவை மிகக்கடுமையான வார்த்தைகளால் மற்ற வீரர்களுக்கு முன் திட்டி தீர்த்தார். அதை சுட்டிக்காட்டி அந்த அணியிலிருந்தே விலகினார் தீபக் ஹூடா. க்ருணல் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே கேப்டன்சி செய்யும்போது கோபத்தை கையாள தெரியாமல் களத்தில் கண்டபடி மற்ற வீரர்களை திட்டுவதை வழக்கமாக கொண்டிருப்பதால், க்ருணலின் சகோதரர் என்பதை ஹர்திக் நிரூபித்துவிட்டார் என்றும், முதிர்ச்சியற்றவரான ஹர்திக் பாண்டியாவை யாருடா கேப்டனாக நியமித்தது என்றும் பாண்டியாவிற்கு எதிராகவும் டுவீட்டுகள் பறக்கின்றன.
