இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பு செய்தவர். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் பாகிஸ்தான் அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.  பாகிஸ்தான் அணிக்காக 120 டெஸ்ட், 378 ஒருநாள் போட்டிகளில் ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். ஒரேயொரு டி20 போட்டியிலும் ஆடியுள்ளார்.

1992ல் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றபோது அந்த அணியில் இன்சமாம் உல் ஹக் ஆடினார். 1992லிருந்து 2007 வரை 15 ஆண்டுகள் பாகிஸ்தான் அணியில் ஆடி சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவிற்கு யூடியூபில் பேட்டியளித்தார். அப்போது அணியில் வீரர்கள் தேர்வு, வீரர்களின் ஆட்டமுறை ஆகியவை குறித்து பேசும்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்களை ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

”நாம் ஆடிய காலத்தில், பேப்பரின் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணியின் வலுவான பேட்டிங் ஆர்டரை பெற்றிருக்கும். இந்திய வீரர்களின் தனிப்பட்ட சாதனைகளுடன் ஒப்பிட்டால் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றுமே இல்லை. ஆனால் நமது வீரர்கள் 30-40 ரன்கள் அடித்தால் கூட அது அணிக்காக இருக்கும். ஆனால் இந்திய வீரர்கள் சதமடித்தால் கூட அது அணிக்காக இருக்காது. அவர்களுக்காகத்தான் இருக்கும். இதுதான் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசம்.

ஒரு வீரருக்கு அணியில் அவரது இடத்தை உறுதி செய்ய வேண்டும். எப்போது நம்மை தூக்குவார்கள் என்ற பயம் வீரர்களிடம் இருக்கக்கூடாது. அப்படியான சூழலை உருவாக்கி விட்டாலே, வெற்றிகள் தானாக வரும். எனவே நீண்டகால லட்சியத்தை நோக்கி பயணிப்பதுதான் முக்கியம். அதனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஆட்டத்தை விமர்சிக்க தேவையில்லை என்றார் இன்சமாம்.

இந்திய வீரர்கள் அணிக்காக ஆடியதேயில்லை என்கிற ரீதியில் சுயநலத்திற்காக மட்டுமே சதமடித்தார்கள் என்று இன்சமாம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.