Asianet News TamilAsianet News Tamil

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..? பவுலிங் கோச் பளீச்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பெற்ற வெற்றிகள், சாதித்த சாதனைகளை மறந்துவிட்டு கேப்டன்சி மாற்றம் குறித்து பேசுவதாக, இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.
 

indian team bowling coach bharat arun speaks about captaincy change
Author
Chennai, First Published Jan 25, 2021, 10:15 PM IST

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். 

கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகக்கவனமாக செயல்பட்டு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் ரஹானே, இந்த தொடரிலும் அதை செய்தார். அதுவும், ஷமி, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், அஷ்வின் என அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயத்தால் தொடர்ச்சியாக வெளியேறியபோதிலும், அனுபவமற்ற வீரர்களை வைத்துக்கொண்டு, அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, சிறப்பான களவியூகங்களை அமைத்து, ஆஸி., அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்டார் ரஹானே.

களவியூகம், ஃபீல்டிங் செட்டர்ப், வீரர்களை கையாண்ட விதம், காயத்தால் வெளியேறிய வீரர்களுக்கு மாற்று வீரர்களாக யார் யாரை இறக்கலாம் என்று எடுத்த முடிவு என அனைத்திலும் ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டதால்தான், இந்த வெற்றி சாத்தியமாயிற்று.

வெளிநாடுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ஆஸி.,யில் எதிர்கொண்ட அத்தனை சவால்களையும் தகர்த்து தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஆஸ்திரேலியாவில் அபாரமான வெற்றியை பெற்றதற்கு முதலில் ரஹானேவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விராட் கோலிக்கு எதிராக எழுதுபவர்கள், கருத்து தெரிவித்தவர்களுக்கு ஒன்றை மட்டும் நினைவுகூர விரும்புகிறேன். கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய 20 டெஸ்ட் தொடர்களில் 14ல் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி விகிதம் 70%.

விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு செய்திருக்கும் பங்களிப்பை மறந்துவிட்டு கோலியை பற்றி எழுதுகிறார்கள். இந்திய அணியின் ஃபிட்னெஸ் கலாச்சாரத்தை மாற்றியவர் கோலி என்று பரத் அருண் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios