திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷிவம் துபே மட்டுமே அபாரமாக பேட்டிங் ஆடினார். தனது முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்த துபே, 30 பந்தில் 54 ரன்களை குவித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொதப்பினர். கோலி, ரோஹித், ராகுல் ஏமாற்றினர். ரிஷப் பண்ட் தட்டுத்தடுமாறி 33 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பினர். 11 ஓவரிலேயே 100 ரன்களை கடந்துவிட்ட இந்திய அணி, கடைசி 4 ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டுமே அடித்தது. அதனால் 20 ஓவரில் வெறும் 170 ரன்கள் மட்டுமே அடித்தது. 

திருவனந்தபுரம் ஆடுகளத்தின் தன்மைக்கு 171 ரன்கள் என்பது எளிய இலக்கு. அந்த அணியின் தொடக்க வீரர்கள் லூயிஸும் சிம்மன்ஸும் நிதானமாக தெளிவாக தொடங்கினர். 4 ஓவருக்கு விக்கெட்டே விழாத நிலையில், ஐந்தாவது ஓவரில் புவனேஷ்வர் குமார் இரண்டு பேரையுமே அவுட்டாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் சிம்மன்ஸின் கேட்ச்சை வாஷிங்டன் சுந்தரும், லூயிஸின் கேட்ச்சை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் தவறவிட்டனர். 

இரண்டுமே ஈசியான கேட்ச்கள். கேட்ச்கள் மேட்ச்களை வென்று கொடுக்கும் என்பார்கள். அதுதான் நடந்தது இந்த போட்டியில்.. சுந்தர் கேட்ச் விட்ட சிம்மன்ஸ் தான், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்ததுடன், கடைசி வரை களத்தில் நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

நல்ல ஃபீல்டிங் அணியான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலுமே படுமோசமாக ஃபீல்டிங் செய்தது. முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 2 கேட்ச்களை தவறவிட்டார். நல்ல ஃபீல்டரான ரோஹித் சர்மா கைக்கு நேராக வந்த கேட்ச்சை விட்டார். 

நேற்று நடந்த போட்டியில் இரண்டாவது அதைவிட மோசம். புவனேஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் முறையே சிம்மன்ஸ் மற்றும் எவின் லூயிஸின் கேட்ச்களை தவறவிட்டனர். ஷ்ரேயாஸ் ஐயர் கடினமான ஒரு வாய்ப்பை முயற்சி செய்து தவறவிட்டார். அது கடினமான சான்ஸ்தான் என்றாலும் பிடித்திருக்கலாம். ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவரான ஜடேஜா கூட மிஸ்ஃபீல்டு செய்தார் என்பதுதான் வருத்தமான விஷயம்.

இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் தோற்றதற்கு முக்கியமான காரணமே மோசமான் ஃபீல்டிங்தான். கைக்கு வந்த கேட்ச்சையே வீரர்கள் தவறவிட்டால் அந்த போட்டியில் ஜெயிப்பது கடினமே. அதுதான் நடந்தது. வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கை கேப்டன் கோலி கடுமையாக சாடினார். 

போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, இந்த லெட்சணத்துல ஃபீல்டிங் செய்தால், எவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தாலும் பத்தாது. கேட்ச்களை தவறவிட்டால் கண்டிப்பாக போட்டி நம்மிடமிருந்து பறிபோய்விடும். ஃபீல்டிங்கில் மேம்பட வேண்டியிருக்கிறது என்று கோலி காட்டமாக தெரிவித்தார்.