வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி தோல்வியை தழுவியது இந்திய அணி. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி148 ரன்கள் அடித்தது. 149 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் அனுபவ வீரரான முஷ்ஃபிகுர் ரஹீம் பொறுப்புடன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வங்கதேச அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேச அணி. 

இந்த போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. எந்தவகையிலுமே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான தோல்விக்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா, போட்டிக்கு பின்னர் தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, இந்த ஆடுகளத்தில்(டெல்லி அருண் ஜேட்லி மைதானம்) 140-150 ரன்களே வெற்றிக்கு போதுமானது. நாம் 148 ரன்கள் அடித்துவிட்டோம். எனவே அதை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஃபீல்டிங்கில் மோசமான செயல்பாடே தோல்விக்கு காரணம். அணியில் இருந்த வீரர்களில் நிறைய பேர் அனுபவமற்ற இளம் வீரர்கள். இந்த போட்டியில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள். எனவே இனிமேல் இதில் செய்த தவறுகளை செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். ரிவியூக்களையும் சரியாக பயன்படுத்தவில்லை. மோசமான ஃபீல்டிங் தான் தோல்விக்கான காரணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.