இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணி, டி20 உலக கோப்பையை கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. 

அதற்காக நல்ல வெரைட்டியான ஆல்ரவுண்டர்களை கொண்ட சிறந்த காம்பினேஷன் கொண்ட அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. பேட்டிங் ஆர்டர் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் உறுதியாகிவிட்டது. பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தான் ஃபாஸ்ட் பவுலர்களாக அணியில் இடம்பெறுவார்கள். தீபக் சாஹருக்கும் வாய்ப்புள்ளது. 

இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடி பல விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்த ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஆடுவார்களா என்பது பெரிய கேள்வியாக இருந்துவந்த நிலையில், அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் கேப்டன் கோலி.

குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. உலக கோப்பைக்கு பின்னரே இருவரும் இணைந்து ஆடவில்லை. சாஹல் மட்டுமே டி20 அணியில் இடம்பெற்றுவருகிறார். அவர் தான் தொடர்ந்து இடம்பெறுவார் என்றும் தெரிகிறது. 

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஆட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து பேசிய கேப்டன் கோலி, இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களை அணியில் பெற்றிருப்பது பெரிய பாக்கியம். பெரிய பெரிய மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் இவர்களின் பங்களிப்பு ரொம்ப முக்கியமாக இருக்கும். ஆனால் ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பு செய்வதால், அணிக்கு வெரைட்டியை அளிக்கின்றனர். 

2 ஃபாஸ்ட் பவுலர்கள், ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டருடன் இறங்க வேண்டும். டி20 போட்டியை பொறுத்தமட்டில் சரியாக 5 பவுலர்களுடன் இறங்க முடியாது. கண்டிப்பாக 6 பவுலர்களுடன் இறங்க வேண்டும். அந்தவகையில் ஜடேஜா, சுந்தர் ஆகியோர் அணிக்கு நல்ல பேலன்ஸை அளிக்கின்றனர் என்பதால் குல்தீப்பும் சாஹலும் சேர்ந்து ஆட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் ஆடுகளத்தின் தன்மை, சூழல் ஆகியவற்றை கருத்தில்கொண்டுதான் அணி தேர்வு இருக்கும். ஜடேஜா அவரது கெரியரில் இப்போதுதான் டாப் பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அவர் அருமையான துல்லியமாக வீசக்கூடிய ஸ்பின்னரும் கூட. சுந்தர் புதிய பந்தில் அபாரமாக வீசுகிறார் என்று அவர்கள் இருவருக்குமான வாய்ப்பை உறுதி செய்ததன் மூலம் குல்தீப்பும் சாஹலும் சேர்ந்து ஆட வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தார் கேப்டன் கோலி.