டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் படுதீவிரமாக தயாராகிவருகிறது. 

உலக கோப்பை அணிக்கான சரியான வீரர்களை தேர்வு செய்வதற்காக இளம் வீரர்கள் பலருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. வழக்கமான இந்திய அணியில் இடம்பெறும் சீனியர் வீரர்களில் தவானின் இடம் மட்டும்தான் கேள்விக்குறியாக உள்ளது. தவான் அண்மைக்காலமாக மந்தமாக ஆடுவதுடன் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் அவ்வப்போது காயமடைந்துவருகிறார். எனவே அவருக்கான இடம் சந்தேகம் தான். ரிஷப் பண்ட் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகம் உறுதியாக நம்புவதால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். 

வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, ஜடேஜா ஆகியோருக்கு இடையே ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டருக்கான போட்டி நிலவுகிறது. காயத்தால் கடந்த சில தொடர்களில் அணியில் இடம்பெறாமல் இருக்கும் ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகிய இருவரும் கண்டிப்பாக உலக கோப்பையில் இடம்பெறுவது உறுதி. 

சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல தீபக் சாஹர் நன்றாக பந்துவீசிவருவதால் புவனேஷ்வர் குமாருக்கான இடமே சந்தேகமாகிவருகிறது. ஏனெனில் பும்ரா, தீபக் சாஹர் ஆகியோருடன் நவ்தீப் சைனியும் சிறப்பாக வீசிவருகிறார். ஆனால் புவனேஷ்வர் குமார் அனுபவம் வாய்ந்த நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர் மட்டுமல்லாது பேட்டிங்கும் ஆடுவார் என்பதால் அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. 

ஷ்ரேயாஸ் ஐயர் நான்காமிடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார். ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமில்லை. கேப்டன் கோலி மூன்றாம் வரிசையில் இறங்குவார். எனவே 3(கோலி), 4(ஷ்ரேயாஸ் ஐயர்), 5(ரிஷப் பண்ட்), 6(ஹர்திக் பாண்டியா), 7(வாஷிங்டன் சுந்தர்) என பேட்டிங் ஆர்டர் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

தொடக்க வீரராக ரோஹித்துடன் இறங்கப்போவது தவானா அல்லது ராகுலா என்பதுதான் பெரிய சந்தேகமாகவும் கேள்வியாகவும் உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, உலக கோப்பைக்கான அணி குறித்து க்ளூ கொடுத்தார். உலக கோப்பைக்கான அணி குறித்து பேசிய கேப்டன் கோலி, அணி மென்மேலும் வலுவடைந்து கொண்டே இருக்கிறது. இனிமேல் அடுத்தடுத்த தொடர்களில் ஆடப்போகும் அணிதான் கிட்டத்தட்ட டி20 உலக கோப்பைக்கான அணியாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

அந்தவகையில், ரோஹித் சர்மா, ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, மனீஷ் பாண்டே/ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா/ க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், பும்ரா, சாஹல். இதுதான் டி20 உலக கோப்பையில் ஆட வாய்ப்புள்ள அணி.