இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று ஹாமில்டனில் நடக்கும் மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 204 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை 132 ரன்களுக்கு சுருட்டி, 133 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், தொடரை வென்றுவிடும். அதனால் இதிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதுகின்றன. எனவே இந்த போட்டி கடுமையாக இருக்கும். 

மூன்றாவது போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய வீரர்கள் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். வீரர்கள் அனைவரும் மொத்தமாக நின்றுகொண்டு, பந்தை மாறி மாறி யாரிடம் வேண்டுமானாலும் தூக்கி வீசி, கேட்ச் பிடித்து தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த பந்தை ஒற்றை கையில் தான் கேட்ச் பிடிக்க வேண்டும். அவ்வாறு ஒற்றை கையில் கேட்ச் பிடித்து வெறித்தனமாக பயிற்சி செய்துள்ளனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அசத்திய நிலையில், 3வது டி20 போட்டிக்கு முன்னதாக தீவிர ஃபீல்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.