இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. 

4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மிகக்கடுமையாக உள்ளதால், ஆஸி.,க்கு வந்தபோது 2 வாரம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்களை மீண்டும் பிரிஸ்பேனில் குவராண்டினில் இருக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய அணி நிர்வாகம், அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அப்படி மீண்டும் குவாரண்டினில் இருக்க வேண்டுமென்றால், பிரிஸ்பேனுக்கு வரமுடியாது. சிட்னியிலேயே 4வது டெஸ்ட்டையும் நடத்த வேண்டும் என்று தெரிவித்தது. விதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால், இந்திய அணி பிரிஸ்பேனுக்கு வரவே தேவையில்லை என்ற குயின்ஸ்லாந்து எம்பிக்கள் தெரிவித்தது இந்திய வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய அணி கண்டிப்பாக பிரிஸ்பேனில் கடும் கண்டிஷன்களை பின்பற்ற வேண்டுமென்றால், கடைசி டெஸ்ட்டை ரத்து செய்துவிட்டு, 3 டெஸ்ட் போட்டிகளுடன் இந்தியாவிற்கு திரும்புவது குறித்து பரிசீலனை செய்துவருகிறது.

இந்நிலையில், “ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை நேரடியாக காண அனுமதிக்கப்படுகிறார்கள். ரசிகர்கள் சுதந்திரமாக போட்டியை கண்டு மகிழ முடியும். ஆனால் அதேவேளையில் வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று குவாரண்டினில் இருக்க வேண்டும் என்றால் அது என்ன நியாயம்? அதுவும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு நெகட்டிவ் என்று தெரிந்தபோதும், குவாரண்டினை ஏற்றுக்கொள்ள முடியாது.  மிருகங்களை போல நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று இந்திய அணியை சேர்ந்த ஒருவர் கிரிக்பஸ்ஸிற்கு தெரிவித்திருக்கிறார்.