உலக கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகிறது. 

லீட்ஸில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா ஆகிய இருவரும் புவனேஷ்வர் குமாரின் ஓவரை அடித்து ஆடினர். 

ஆனால் பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறினர். பும்ராவின் பவுலிங்கில் 9 பந்துகளை பேட்டிங் ஆடி ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் திணறிய கருணரத்னே, பும்ரா தனக்கு வீசிய 10வது பந்தில் ஆட்டமிழந்தார். கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, மற்றொரு தொடக்க வீரரான குசால் பெரேராவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 

குசால் பெரேராவின் கேட்ச்சை ஐந்தாவது ஓவரில் குல்தீப் கோட்டைவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிய பெரேரா, 18 ரன்களில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். பும்ராவை நிறுத்திவிட்டு 10வது ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. 

அதன்பின்னர் இந்த உலக கோப்பையில் தனது முதல் போட்டியை ஆடும் ஜடேஜா 11வது ஓவரை வீசினார். தனது முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே குசால் மெண்டிஸை வீழ்த்தினார். ஜடேஜா வீசிய பந்தை மெண்டிஸ் இறங்கிவந்து அடிக்கத்தவறினார். அதை பிடித்து வழக்கம்போலவே அதிவேகமாக ஸ்டம்பிங் செய்தார் தோனி. மெண்டிஸ் 3 ரன்களில் நடையைக்கட்ட, அதற்கு அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஃபெர்னாண்டோ. 

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஃபெர்னாண்டோவும் வெளியேற, 55 ரன்களுக்கே இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. மேத்யூஸும் திரிமன்னேவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.