இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

தொடக்க வீரர் தவான் காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணிக்கு திரும்பிவிட்ட அதேவேளையில், ராகுலும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இருவருமே அணியில் சேர்க்கப்பட்டனர். ரோஹித் - தவான் தொடக்க வீரர்களாகவும் ராகுல் மூன்றாம் வரிசையிலும் இறங்கினர். 

தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா, 15 பந்தில் 10 ரன்கள் மட்டுமே அடித்து ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து தவானுடன் ராகுல் இணைந்தார். இருவருமே மந்தமாக ஆடினர். ஒருவர் நிதானமாக ஆட, மற்றொருவர் அடித்து ஆடி ஸ்கோர் செய்திருக்க வேண்டும். ஆனால் இருவருமே மந்தமாக ஆடி மெதுவாக ஸ்கோர் செய்தனர். களத்தில் நிலைத்த பின்னர், வீணடித்த பந்துகளை ஈடுகட்டி விட்டாவது சென்றிருக்க வேண்டும். ஆனால் ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவருமே அதை செய்ய தவறிவிட்டனர். 

61 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்த ராகுல், அரைசதம் கூட அடிக்காமல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே மந்தமாக ஆடிய தவான், கடைசி வரை அதிரடியாகவே ஆடாமல் 91 பந்தில் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 90 பந்துகள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்த வீரர், அணிக்கு எந்த வித நல்லதையும் செய்யாமல் அம்போனு விட்டுட்டு 74 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

மும்பை வான்கடே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவதும் சவாலாக இருக்கும். எனவே முடிந்தவரை பெரிய ஸ்கோரை அடித்தாக வேண்டும். ஆனால் டாப் ஆர்டர்களோ மந்தமாக ஆடிவிட்டு சென்றதால், அழுத்தம் அதிகரித்தது. எனவே அடித்து ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் அடுத்தடுத்து பெரிய ஷாட்டுக்கு முயற்சித்த கேப்டன் கோலி, 14 பந்தில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் ஆடிவருகின்றனர். 

38 ஓவரின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 183 ரன்கள் மட்டுமே அடித்து ஆடிவருகிறது.