இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில், இதற்கு முன்னர் களமிறங்கிய டி20 அணிகளிலிருந்து முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார் என்று ஏற்கனவே கேப்டன் கோலி உறுதி செய்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் ஆடமாட்டார் என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டது. அந்தவகையில் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஆடவில்லை. ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்குகிறார். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே அடுத்தடுத்த ஆர்டரில் ஆடுகின்றனர். 

டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்து, இந்தியாவில் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஆடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் ஆடவில்லை. ஆல்ரவுண்டர் ஜடேஜாவுடன், மற்றொரு ஆல்ரவுண்டராக ஷிவம் துபே அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது ஸ்பின்னராக சாஹல் எடுக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். நவ்தீப் சைனி  அணியில் எடுக்கப்படவில்லை. நல்ல வேகத்தில் வீசி எதிரணி வீரர்களை மிரட்டக்கூடிய நவ்தீப் சைனி ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. அதேபோல சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, சாஹல், பும்ரா. 

டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக, தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டிகளில், டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, இந்த முறை சேஸிங் செய்ய முடிவு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வெல்வது முக்கியம் என்பதால், வெற்றிதான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சேஸிங்கில் கிங் என்பதால், வெற்றியை கருத்தில்கொண்டு சேஸிங் செய்ய கேப்டன் கோலி முடிவெடுத்துள்ளார்.