வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கெய்லும் லெவிஸும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடினர். முதல் நான்கு ஓவர்களில் கெய்லும் லெவிஸும் இணைந்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய ஐந்தாவது ஓவரில் கெய்ல் அதிரடியை தொடங்கினர். அதன்பின்னர் 5,6 மற்றும் 7 ஆகிய மூன்று ஓவர்களிலும் சேர்த்து 50 ரன்கள் அடிக்கப்பட்டது. 

4 ஓவரில் 13 ரன்கள் என்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 ஓவரில் 63 ரன்கள் குவித்தது. கலீல் அகமது வீசிய 8வது ஓவரில் லெவிஸ், ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அடிக்க, 8வது ஓவர் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 79. கெய்லும் லெவிஸும் தொடர்ந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். 10 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 114 ரன்களை குவித்தது. 

29 பந்துகளில் 43 ரன்களை குவித்திருந்த லெவிஸை வீழ்த்தி சாஹல் பிரேக் கொடுத்தார். அரைசதம் அடித்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த கெய்லை, 72 ரன்களில் கலீல் அகமது வீழ்த்தினார். 22 ஓவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 158 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நீண்டநேரம் தடைபட்டது. அதனால் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கெய்ல் விக்கெட்டுக்கு பிறகு, ஹோப்பும் ஹெட்மயரும் மிகவும் மந்தமாக ஆடி பந்துகளை வீணடித்தனர். கெய்ல் விக்கெட்டுக்கு பிறகு பூரான் மட்டுமே அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் யாருமே சரியாக சோபிக்கவில்லை. 

அதனால் அந்த அணி 35 ஓவர் முடிவில் 240 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவரில் 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்கினார். 6 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, ரன் அவுட்டாகி வெளியேறினார். கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடிய தவான், இந்த முறையும் சோபிக்கவில்லை. 36 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த ரிஷப் பண்ட், முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார்.

அதன்பின்னர் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை காப்பாற்றினர். இலக்கு கடினம் என்பதால், கோலி ஒருமுனையில் அடித்து ஆட, அவரை மிஞ்சுமளவிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து நொறுக்கினார். அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் அரைசதம் அடிக்க, விராட் கோலி மீண்டுமொரு சதமடித்தார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 120 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 43வது சதத்தை விளாசிய கோலி, 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோலி - ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால் 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய அணி.