Asianet News TamilAsianet News Tamil

செம மேட்ச்.. கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி!! ஹீரோவான விஜய் சங்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

india thrill win against australia in second odi
Author
Nagpur, First Published Mar 5, 2019, 10:21 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. 

தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, அதன்பிறகு தவானும் 21 ரன்களில் வெளியேறினார். 9வது ஓவரிலேயே களத்திற்கு வந்த ராயுடு அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் 18 ரன்களில் வெளியேறினார். 

அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு கோலியும் விஜய் சங்கரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.  சிங்கிள் ரொடேட் செய்து சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசினார். ஒரு சிக்ஸரும் அடித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விஜய் சங்கர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். 

கோலி நேராக அடித்த பந்து பவுலர் ஆடம் ஸாம்பாவின் கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது கிரீஸை விட்டு வெளியே வந்திருந்த விஜய் சங்கரால் கிரீஸை தொட முடியாததால் ரன் அவுட்டானார். சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், 41 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் கேதர் ஜாதவ் அவசரப்பட்டு ஸாம்பாவின் சுழலில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேற, அதற்கு அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார் தோனி. 

இதையடுத்து கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஜடேஜா, 40 பந்துகளில் 21 ரன்கள் அடித்து கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 40வது சதத்தை பூர்த்தி செய்தார். 107 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் கோலி. 

சதத்திற்கு பிறகு அடித்து ஆடி முடிந்தவரை ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த விராட் கோலி, சதத்திற்கு பிறகு பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. கம்மின்ஸ் வீசிய 48வது ஓவரின் முதல் பந்தில் கோலியை 116 ரன்களில் வீழ்த்தினார். கோலியை அடுத்து அதே ஓவரில் குல்தீப் யாதவும் கிளீன் போல்டாகி வெளியேற, குல்ட்டர்நைல் வீசிய அடுத்த ஓவரில் பும்ரா போல்டானார். இதையடுத்து இந்திய அணி 250 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 
 
251 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார் குல்தீப் யாதவ். 37 ரன்களில் ஃபின்ச் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து 38 ரன்களில் கேதர் ஜாதவின் பந்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குல்தீப், கேதர் ஜாதவ், ஜடேஜா ஆகிய மூவரும் ஆஸ்திரேலிய அணியை மிடில் ஓவர்களில் ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் படிப்படியாக குறைந்தது. ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் ஆட்டமிழக்க, ஹேண்ட்ஸ்கம்ப் மட்டும் களத்தில் நிலைத்து ஆடினார். 

அவரை 48 ரன்களில் அபாரமான ரன் அவுட்டின் மூலம் வெளியேற்றினார் ஜடேஜா. விஜய் சங்கர் ஒரே ஒரு ஓவர் வீசி 13 ரன்களை கொடுக்க, அதன்பிறகு அவருக்கு பவுலிங்கே வழங்கப்படவில்லை. குல்தீப், ஜடேஜா, கேதர் ஆகிய மூவர் மட்டுமே பந்துவீசினர். ஹேண்ட்ஸ்கம்பின் விக்கெட்டுக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் நிதானமாக ஆடி இலக்கை விரட்டினார். 

டெத் ஓவர்களில் பும்ராவும் ஷமியும் அபாரமாக வீசி ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர். 49 ஓவர்களில் பும்ரா மற்றும் ஷமியின் ஓவர்கள் முடிந்துவிட்டன. கடைசி ஓவரை கேதரை வீசவைக்க முடியாது என்பதால் விஜய் சங்கரே வீசினார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஒரேயொரு ஓவரை மட்டுமே வீசியிருந்த விஜய் சங்கர், மிகவும் நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்திலேயே மார்கஸ் ஸ்டோய்னிஸை வீழ்த்தினார். இரண்டாவது ஓவரில் 2 ரன்களை கொடுத்த விஜய் சங்கர், மூன்றாவது பந்தில் ஆடம் ஸாம்பாவை போல்டாக்கினார். 

இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு 500வது ஒருநாள் போட்டி வெற்றி. 

Follow Us:
Download App:
  • android
  • ios