இந்திய அணி தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் உள்ள நிலையில், அடுத்ததாக வங்கதேச அணியுடன் மோதுகிறது. 

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகிய இளம் திறமைசாலிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அதே டெஸ்ட் அணிதான் வங்கதேசத்துக்கு எதிராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் வீரர் ஷுப்மன் கில் இந்த தொடருக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். வங்கதேச அணியை சொந்த மண்ணில் இந்திய அணி எளிதாக வீழ்த்திவிடும் என்பதால் இந்த தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட். 

ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகிய இருவரும் காயத்தால் அவதிப்பட்டுவருவதால் இந்த தொடருக்கான டெஸ்ட் அணியிலும் இடம்பெறவில்லை.