உலக கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியுடன் ஆடிவருகிறது வங்கதேச அணி. பர்மிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வழக்கமாக நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியை கையில் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார். அதன்பின்னர் 5வது ஓவரில் ரோஹித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமீம் இக்பால் தவறவிட, அதன்பின்னர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரோஹித், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார்.

ரோஹித் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, இந்த உலக கோப்பையில் தனது 4வது சதத்தை விளாசினார் ரோஹித். 29வது ஓவரிலேயே ரோஹித் சதமடித்ததால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 104 ரன்களிலேயே ஆட்டமிழந்தார் ரோஹித். ராகுலும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

34வது ஓவரிலேயே 200 ரன்களை இந்திய அணி எட்டிவிட்டதால் 350 ரன்களாவது எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் பிட்ச் ஸ்லோவானதால் கடைசி 10 ஓவர்களில் ஸ்கோர் செய்ய கடினமாக இருந்ததால் பெரிய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. இந்திய அணியின் ஸ்கோரை டெத் ஓவர்களில் உயர்த்தித்தரக்கூடிய ஹர்திக் பாண்டியா டக் அவுட்டானார். விராட் கோலி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட்டும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். தினேஷ் கார்த்திக்  ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தோனி ஒருசில பவுண்டரிகளை அடித்தாலும் அவரால் பெரிதாக அடிக்கமுடியவில்லை. அவரும் 35 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 314 ரன்கள் எடுத்தது.

இந்த ஆடுகளத்தில் 315 ரன்கள் என்பது மிகவும் சவாலான இலக்கு. அதுவும் இந்திய அணி பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் என 3 தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுவதால் வங்கதேச அணிக்கு இது மிகவும் கடின இலக்குதான்.