வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்துவருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு காயம் காரணமாக ஆடாததால், இந்த போட்டியில் நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்படுகிறார். பொல்லார்டுக்கு பதிலாக ஒடின் ஸ்மித் அணியில் எடுக்கப்பட்டார்.
முதல் போட்டியில் ஆடாத கேஎல் ராகுல் இந்த போட்டியில் ஆடுவதால் இஷான் கிஷன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக இறக்கியது அணி நிர்வாகம். ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார்.
ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தலா 18 ரன்னில் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ராகுலும் சூர்யகுமாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிடில் ஓவர்களில் அருமையாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அரைசதத்தை நெருங்கிய ராகுல் 49 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு ராகுலும் சூர்யகுமாரும் இணைந்து 91 ரன்களை குவித்தனர். ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னரும் நன்றாக ஆடிய சூர்யகுமார் அரைசதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆடினார். களத்தில் நன்றாக செட்டில் ஆன சூர்யகுமார் யாதவ் தான் அணியின் ஸ்கோரை பெரிதாக எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் 64 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டார்.
வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 8 ரன் மட்டுமேஅடித்தார். தீபக் ஹூடா 29 ரன் அடித்து கடைசியில் ஆட்டமிழந்தார். 50 ஓவரில் இந்திய அணி 237 ரன்கள் அடித்து, 238 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.
2வது இன்னிங்ஸில் பனி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்திய பவுலர்களுக்கு பந்துவீசுவது கடினமாக இருக்கும். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு பந்துவீசுவது மிகச்சவாலாக இருக்கும். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த இலக்கை விரட்டுவது பெரிய சவாலாக இருக்காது.
