ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. ராயுடுவுக்கு பதில் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து சொதப்பிவந்த தவான், இந்த போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். ரோஹித் - தவான் இருவருமே தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். தவான் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார். ரோஹித் சர்மா வழக்கம்போல தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடினார்.

இருவரும் இணைந்து சிறப்பாக ஆட, முதல் விக்கெட்டை வீழ்த்தவே திணறினர். 92 பந்துகளில் 95 ரன்களை குவித்த ரோஹித் சர்மா 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஆனால் தவான் அவசரப்படவில்லை. சதத்தை பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசிய தவான், 115 பந்துகளில் 143 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கோலி 7 ரன்களில் ஆட்டமிழக்க, களத்தில் நிலைத்து நின்ற ராகுல் தவறான ஷாட் செலக்‌ஷனால் ஸாம்பாவின் பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் மட்டுமே சில பவுண்டரிகளை அடித்தார். அவரும் 36 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

டெத் ஓவர்களை கம்மின்ஸும் ரிச்சர்ட்ஸனும் இணைந்து நன்றாக வீசினர். சாதாரணமாக 370 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டிய இந்திய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். கேதர் ஜாதவும் கம்மின்ஸின் பந்தில் வெளியேற, 49வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் விஜய் சங்கர். கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸரை விளாசிய விஜய் சங்கர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டாக களத்திற்கு வந்த பும்ரா, சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. 

ரோஹித்தும் தவானும் அமைத்து கொடுத்த அடித்தளத்திற்கு இந்த ஸ்கோர் மிகக்குறைவு. 32 ஓவர்களிலேயே இந்திய அணி 200 ரன்களை எட்டிவிட்ட நிலையில், எஞ்சிய 18 ஓவர்களுக்கு 158 ரன்கள் என்பது குறைவு. ரோஹித் 95 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் 400க்கு மேல் போயிருக்கும். இதே மைதானத்தில்தான் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் ஒருநாள் போட்டியில் தனது மூன்றாவது இரட்டை சதத்தையும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சதமடித்திருந்தால் இமாலய ஸ்கோரை இந்திய அணி எட்டியிருப்பது உறுதி.