இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது இந்திய அணி. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - ராகுல் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 126 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புஜாரா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் நிதானமாக ஆடி களத்தில் செட்டில் ஆனபின்னர், அடித்து ஆடி சதமடித்த ராகுல், 127 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கோலி 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுலும் ரஹானேவும் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 129 ரன்கள் அடித்து ராகுல் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ரஹானே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரிஷப் பண்ட் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷமி டக் அவுட்டானார். அதன்பின்னர் ஜடேஜாவுக்கு இஷாந்த் சர்மா சற்று ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய நிலையில், இஷாந்த் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா டக் அவுட்டானார். இதையடுத்து கடைசி விக்கெட்டாக 40 ரன்களுக்கு ஜடேஜா அவுட்டானார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.