இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை 3-2 என ஆஸ்திரேலிய அணி வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரை இழந்ததன் மூலம் மோசமான சாதனை ஒன்றுக்கு இந்திய அணி சொந்தமாகியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஆடியது. டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. 

இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்தது. இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இந்த தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதன்பின்னர் 3 மற்றும் 4வது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 

தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் உஸ்மான் கவாஜாவின் சதம் மற்றும் ஹேண்ட்ஸ்கம்பின் பொறுப்பான அரைசதத்தால் அந்த அணி 272 ரன்களை எடுத்தது. 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரையும் 3-2 என வென்றது. 

உலக கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் இந்திய அணி தொடரை இழந்திருப்பது வருத்தமான விஷயம்தான். 2015ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை இழக்கவேயில்லை. 

அதுவும் முதல் 2 போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை வகித்துவிட்டு ஒருநாள் தொடரை இழப்பது, இது இந்திய அணிக்கு இரண்டாவது முறை. ஏற்கனவே 2005ம் ஆண்டில் பாகிஸ்தானிடம் இதேபோன்று 2-0 என முன்னிலை வகித்த இந்திய அணி, இறுதியில் தொடரை இழந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியை அதேபோன்று வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி. (இந்த மோசமான சாதனையை தவிர்க்கும் விதமாகவாவது கடைசி போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என நேற்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.) இதுக்காகவாவது கடைசி போட்டியில் தோற்றுவிட கூடாது!! கடும் நெருக்கடியில் இந்திய அணி

2-0 என முன்னிலை வகித்துவிட்டு பின்னர் தொடரை இழந்ததில் 2 முறை இழந்த ஒரே அணி இந்திய அணிதான். இந்த மோசமான சாதனை தேவையில்லாத விரும்பத்தகாத ஒன்று. உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இது விரும்பத்தகாத மோசமான சாதனை.