இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தது. ஷமி, உமேஷ் வேகத்தில் மிரட்ட, ஜடேஜாவும் நதீமும் ஸ்பின்னில் தங்களது பங்களிப்பை செய்தனர். தென்னாப்பிரிக்க அணியில் எந்த வீரரும் சரியாக ஆடாததால், ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. அதனால் வெறும் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

335 ரன்கள் பின் தங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, ஃபாலோ ஆன் கொடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர வைத்தது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு மறுபடியும் அதிர்ச்சியே காத்திருந்தது. இரண்டாவது ஓவரை வீசிய உமேஷ், அந்த ஓவரின் முதல் பந்திலேயே டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். 5 ரன்களில் டி காக் கிளீன் போல்டாகி வெளியேற, அதன்பின்னர் ஹம்ஸா, டுப்ளெசிஸ், பவுமா ஆகிய மூவரையும் ஷமி வீழ்த்தினார். 

தென்னாப்பிரிக்க அணி 22 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மறுமுனையில் நிலைத்து நின்ற தொடக்க வீரர் எல்கருடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் தலையில் பலமாக அடிவாங்கினார் எல்கர். அதனால் அவர் நிலைதடுமாற, அவரால் தொடர்ந்து ஆடமுடியாததால், முன்கூட்டியே டி பிரேக் விடப்பட்டது.