தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியில் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி அசத்தியுள்ளது. 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவின் அசுர வேக பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில், 4-ம் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புரூயின்(30), நிகிடி(0) இருவரும், நதீம் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3, உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி அசத்தியுள்ளது. 

3-வது டெஸ்டில் இரட்டை சதம் மற்றும் தொடரில் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.