பிரசித் கிருஷ்ணாவின் அபாரமான பவுலிங்கால் வெஸ்ட் இண்டீஸை 2வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு காயம் காரணமாக ஆடாததால், இந்த போட்டியில் நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டார். பொல்லார்டுக்கு பதிலாக ஒடின் ஸ்மித் அணியில் எடுக்கப்பட்டார். 

முதல் போட்டியில் ஆடாத கேஎல் ராகுல் இந்த போட்டியில் ஆடியதால் இஷான் கிஷன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக ரோஹித்துடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினார். ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தலா 18 ரன்னில் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ராகுலும் சூர்யகுமாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிடில் ஓவர்களில் அருமையாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரைசதத்தை நெருங்கிய ராகுல் 49 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு ராகுலும் சூர்யகுமாரும் இணைந்து 91 ரன்களை குவித்தனர். ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்னில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 8 ரன் மட்டுமேஅடித்தார். தீபக் ஹூடா 29 ரன் அடித்து கடைசியில் ஆட்டமிழந்தார். 50 ஓவரில் இந்திய அணி 237 ரன்கள் அடித்தது.

238 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பிரண்டன் கிங் (18) மற்றும் டேரன் பிராவோ (1) ஆகிய இருவரையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஷேய் ஹோப்பை 27 ரன்னில் வீழ்த்தினார் யுஸ்வேந்திர சாஹல். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கியமான விக்கெட்டை சாஹல் வீழ்த்தினார்.

அதன்பின்னர் ப்ரூக்ஸ் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் பூரன் (9) மற்றும் ஹோல்டர் (2) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். 5 விக்கெட்டுகளுக்கு பிறகு ப்ரூக்ஸும் அகீல் ஹுசைனும் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைக்க, அதை தீபக் ஹூடா பிரித்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ப்ரூக்ஸை 44 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் தீபக் ஹூடா. இதுதான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தீபக் ஹூடாவின் முதல் விக்கெட். அகீல் ஹுசைனை 34 ரன்னில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

பின்வரிசையில் இறங்கிய ஒடீன் ஸ்மித் அதிரடியாக ஆடி ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்றார். அதிரடியாக ஆடியதுடன், சூழலுக்கு ஏற்பவும், பவுலிங்கிற்கு ஏற்பவும் சிறப்பாக ஆடினார். கடைசிவரை ஆட்டத்தை எடுத்துச்செல்லும் முனைப்பில் ஆடிய ஒடீன் ஸ்மித்துக்கு அல்ஸாரி ஜோசஃப் சரியான ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

ஒடீன் ஸ்மித்தை 24 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, கடைசி விக்கெட்டாக கீமார் ரோச்சின் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.

அபாரமாக பந்துவீசி 9 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.