வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஆண்டிகுவாவில் கடந்த 22ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் முதல் 3 விக்கெட்டுகள் 25 ரன்களுக்கே சரிந்துவிட்ட நிலையில் அதன்பின்னர் ராகுலும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அந்த இன்னிங்ஸில் ரஹானே அபாரமாக ஆடி 81 ரன்களை குவித்தார். அதன்பின்னர் பின் வரிசையில் ஜடேஜா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ரஹானே, ராகுல், ஜடேஜா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய அணியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொஞ்சம் கூட பொறுமை காக்காமல் அவசரப்பட்டு விக்கெட்டுகளை இழந்தனர். சேஸ் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் யாருமே அரைசதம் அடிக்கவில்லை. இஷாந்த் சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வாலும், புஜாராவும் இம்முறையும் சோபிக்கவில்லை. ராகுல் முதல் இன்னிங்ஸை போலவே, கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறினார். ஆனால் அணியின் கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் இணைந்து அபாரமாக ஆடினர். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது. நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 

நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே கோலி நடையை கட்டினார். அதன்பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி பொறுப்பாக ஆடினார். ரஹானேவும் ஹனுமா விஹாரியும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 135 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடி சதமடித்த ரஹானே, 102 ரன்களில் கேப்ரியலின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 7 ரன்களில் சதத்தை தவறவிட்டு 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் மறுபடியும் சோபிக்கவில்லை. அவர் வெறும் 7 ரன்களில் அவுட்டாக, இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி 343 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து 419 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். சேஸ் 12 ரன்களும் கீமார் ரோச் 38 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னே ரோச் அடித்த 38 ரன்கள் தான். பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 60 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.