உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணி என்ற பெருமையுடன் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. மான்செஸ்டரில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 268 ரன்கள் அடித்தது. ரோஹித் சோபிக்காத நிலையில் ராகுல் 48 ரன்கள் அடித்தார். 

வழக்கம்போலவே நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடிய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இதற்கிடையே விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 46 ரன்களை சேர்த்து கொடுத்தார். மிடில் ஓவர்களில் நிதானமாக ஆடிய தோனி, கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து முடித்தார். இதையடுத்து இந்திய அணி 268 ரன்கள் அடித்தது. 

269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷமி மற்றும் பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். கெய்ல், ஹோப் ஆகிய இருவரையும் தொடக்கத்திலேயே ஷமி வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் அம்பிரிஷ், பூரன் ஆகியோரும் பெரிதாக சோபிக்கவில்லை. களத்தில் செட்டில் ஆன அவர்களை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் இந்திய பவுலர்கள் வீழ்த்திவிட்டனர்.  அதன்பின்னர் ஒருமுனையில் ஹெட்மயர் நிற்க, மறுமுனையில் ஹோல்டர், ப்ராத்வெயிட், நர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. அதன்பின்னர் ஹெட்மயரும் ஆட்டமிழக்க, எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் எளிதாக வீழ்த்தி 143 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டி முழுக்க முழுக்க ஒருதலைபட்சமான போட்டியாக அமைந்துவிட்டது. பவுலிங்கில் ஓரளவிற்கு நன்றாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ், பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. கொஞ்சம் கூட போராட்டமே இல்லாமல் இந்திய அணியிடம் மண்டியிட்டு சரணடைந்தது வெஸ்ட் இண்டீஸ். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி, புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது.