Asianet News TamilAsianet News Tamil

கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஷமி.. ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் 225 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் 213 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியை சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
 

india beat afghanistan by 11 runs
Author
England, First Published Jun 22, 2019, 11:24 PM IST

சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரரும் இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ராகுலுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். நிதானமாக ஆடி களத்தில் நன்றாக செட்டான ராகுல், முகமது நபியின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து ஆட்டமிழந்தார். 53 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். 

அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிவந்தார். ஆனால் அதை தொடரவில்லை. விஜய் சங்கர் ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக ஆடினார்.  ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கை அடித்து ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். 

மிடில் ஆர்டரில் நிலைத்து ஆடி தனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட விஜய் சங்கர், 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அரைசதம் அடித்த கோலியும் 67 ரன்களில் அவுட்டானார். கோலி அரைசதம் அடித்தாலே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றிவிடுவார். ஆனால் இந்த முறை விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற விடவில்லை. முகமது நபி விராட் கோலியை வீழ்த்தினார். 

அதன்பின்னர் தோனியும் கேதர் ஜாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து ஓரளவிற்கு மீட்டனர். ஆனால் மிகவும் மந்தமாக ஆடியதால் ஸ்கோர் குறைவாக இருந்தது. தோனி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ் அரைசதம் அடித்தாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடமுடியவில்லை. 

ஹர்திக் பாண்டியாவும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பெரிய ஸ்கோர் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு முதல் ஓவர் முதலே நெருக்கடி கொடுத்தது இந்திய அணி. முதல் 8 ஓவர்களை பும்ராவும் ஷமியும் இணைந்து அபாரமாக வீசினர். தொடக்கம் முதலே அடிக்க முடியாமல் திணறிவந்த ஹஷ்ரதுல்லா சேஸாய் 10 ரன்களில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து நிதானமாக நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான குல்பாதின் நைபை 27 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷாவும் ஷாஹிடியும் இணைந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடியை தனது இரண்டாவது ஸ்பெல்லில் ரஹ்மத் ஷா மற்றும் ஷாஹிடி ஆகிய இருவரையுமே ஒரே ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

அதன்பின்னர் அஸ்கர் ஆஃப்கான், ஜட்ரான் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டேயிருக்க, ஒருமுனையில் முகமது நபி நிலைத்து நின்றார். இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தி கொண்டேயிருந்தாலும் கடைசி ஓவர் வரை ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வைத்திருந்தவர் முகமது நபி தான். 

அவர் எவ்வளவுதான் போராடினாலும் அவருக்கு வெற்றியை எளிதாக கொடுத்துவிட தயாராக இல்லை இந்திய அணி. ஆனாலும் நபி விடாமல் போராடினார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ரா, 49வது ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் ஆஃப்கானின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி கொடுத்த ஷமி, இரண்டாவது பந்தில் ரன் கொடுக்கவில்லை. அடுத்த 3 பந்துகளிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார்.

இதையடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios