தியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டி ராஞ்சியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி 50 ஓவரில் 283 ரன்களை குவித்தது. 

இந்தியா பி அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் ரன்னே எடுக்காமலும் பார்த்திவ் படேல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த பாபா அபரஜித்தும் சரியாக ஆடவில்லை. அபரஜித் 13 ரன்களிலும் ராணா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 45 ரன்களை அடித்தார் விஜய் சங்கர். 

48 ஓவரில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்திருந்தது. விஜய் சங்கரின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், கடைசி இரண்டு ஓவரில் காட்டடி அடித்து அணியின் ஸ்கோரை தாறுமாறாக உயர்த்தினார். 

திவேஷ் பதானியா வீசிய 49வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசினார் கிருஷ்ணப்பா கௌதம். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 31 ரன்கள் அடிக்கப்பட்டது. அதன்பின்னர் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார் கௌதம். கடைசி ஓவரில் மொத்தம் 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. கிருஷ்ணப்பா கௌதமின் கடைசி நேர அதிரடியால் இந்தியா பி அணி 50 ஓவரில் 283 ரன்களை குவித்தது. கிருஷ்ணப்பா கௌதம் வெறும் 10 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். 

284 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சி அணியின் முக்கியமான வீரர்கள் அனைவருமே ஏமாற்றமளிக்க, அந்த அணி 232 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியா சி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மயன்க் அகர்வால் 28 ரன்களில் அவுட்டாக, விராட் சிங் 6 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் தலா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ப்ரியம் கார்க் அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 74 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிய அக்ஸர் படேல், 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் இந்தியா பி அணியின் வெற்றி உறுதியானது. எனினும் ஜலஜ் சக்ஸேனா கடைசி வரை களத்தில் நின்று 37 ரன்கள் அடித்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா சி அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் அடித்தது. இதையடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி, கோப்பையை வென்றது.