ரிஷப் பண்ட் குணமடைய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும்: பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டிய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும் தெரிவித்துள்ள வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ள
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?
ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த நிலையில், கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி இந்திய கிரிக்கெட் அணியின் பிரார்த்தனையும், வாழத்தும் தெரிவித்துள்ளனர். அவர்களது வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் டிராவிட், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், யுஸ்வேந்திர சகால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராகுல் டிராவிட் பேசும் போது, ஹாய் ரிஷப், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் குணமடைந்து வருவீர்கள் என்று நம்பிகிறேன். கடந்த ஒரு ஆண்டுகாலமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் உங்களது சிறப்பான ஆட்டத்தை கவனித்து வருகிறேன். எப்போதெல்லாம் கடினமான சூழ்நிலையில் நாம் இருக்கும் போது அப்போதெல்லாம் உங்களது பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது. உங்களது குணம், திறமை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விரைவில் நீங்கள் மீண்டு வர வேண்டும் என்று பேசியுள்ளார்.
ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து பேசிய இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ஹாய் ரிஷப், நீங்கள் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்கள், நீ எவ்வளவு பெரிய ஃபைட்டர் என்று எனக்கு தெரியும். ஒட்டுமொத்த நாடும், அணியும் உன் பின்னால் இருக்கிறது. நீ விரைவில் நலம் பெற்று திரும்ப வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் பேசியுள்ளனர்.