இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களுமே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் கடுமையாக போராடுவார்கள்.

தற்போதைய இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. தற்போதைய இந்திய அணியிடம் பாகிஸ்தான் ஜெயிப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. ஆனால் ஆரம்பத்தில் நிலைமை அப்படியில்லை. 

1980 - 2000ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் அதிகமான தோல்வியை(உலக கோப்பை தவிர) தழுவியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதை தற்போது திமிராக இம்ரான் கான் சுட்டிக்காட்டியிருக்கும் விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் வெற்றிகரமான கேப்டன் இம்ரான் கான். அந்த அணிக்கு 1992ல் உலக கோப்பையை வென்றுகொடுத்தவர். அந்த அணி மிகச்சிறந்த அணியாக இல்லையென்றாலும், தனது சிறப்பான கேப்டன்சியால், அணி வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்து எதிரணிகளை வீழ்த்தி உலக கோப்பையை வென்று கொடுத்தவர். 

தற்போது பாகிஸ்தானின் பிரதமராக இருக்கும் இம்ரான் கான், ஒரு நிகழ்ச்சி ஒன்றில், எங்க காலத்தில் ஆடிய இந்திய அணிக்காக நான் மிகவும் வருந்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் அடிக்கடி இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியிருக்கிறது. அதனால் நம்முடன் ஆடும்போது இந்திய வீரர்கள் பதற்றத்துடனேயே இருப்பார்கள்.

டாஸ் போடும்போது இந்திய அணியின் கேப்டன்களின் முகத்தை பார்ப்பேன். அப்போது அவர்களது முகத்திலேயே பயம் தெரியும். ஆனால் இப்போதைய இந்திய அணி அப்படியில்லை. இப்போது இந்திய அணி மற்ற அணிகளை காட்டிலும் வலுவான சிறந்த அணியாக உள்ளது. ஆனால் அப்போதைய இந்திய அணி இந்தளவிற்கு இல்லை என்று இம்ரான் கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அப்போது, இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்றதில்லை. வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான் அதிகமாக வென்றிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக பயந்தார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். இம்ரான் கானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அப்போதைய இந்திய வீரர்களில் யாராவது பதிலடி கொடுக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.