3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள், ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஃப்கானிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய் மற்றும் ஜாவேத் அஹ்மதி ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 15 ரன்களுக்கே அவர்கள் இருவரின் விக்கெட்டையும் இழந்துவிட்டது ஆஃப்கானிஸ்தான் அணி. 

இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இக்ரம் அலி கில்லும் ரஹ்மத் ஷாவும் பொறுப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இக்ரம் அலி கில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரஹ்மத் ஷாவும் சிறப்பாக ஆடினார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தனர். 

இக்ரம் அலி கில் 58 ரன்களில் நெஞ்சை உருகவைக்கும் வகையில் ரன் அவுட்டானார். ரஹ்மத் ஷா 49 ரன்களில் களத்தில் இருந்தபோது, ஒரு ஷாட் அடித்தார். அதற்கு இருவரும் ஒரு சிங்கிள் ஓடினர். எனவே ரஹ்மத் ஷாவிற்கு அது 50வது ரன் என்பதால், அரைசதம் அடித்த பார்ட்னரை வாழ்த்துவதற்காக, கிரீஸை தொட்டுவிட்டு அவசரமாக ரஹ்மத் ஷாவை நோக்கி நடந்தார் இக்ரம். ஆனால் இக்ரம் அலி கில் கிரீஸை தொட்டுவிட்டு திரும்பிய அந்த நொடிதான், வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் பந்து வந்தது. எனவே இக்ரம் கிரீஸை விட்டு விலகியதை அடுத்து பந்தை ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார் ஹோப்.

கிரீஸை தொட்ட திருப்தியிலும் தைரியத்திலும் நின்றார் இக்ரம். ஆனால் ஹோப் ஸ்டம்பை அடிக்கும்போது இக்ரம் கிரீஸில் இல்லாததால் அதற்கு தேர்டு அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த இக்ரம், தேவையில்லாமல் அவசரத்தால் அவுட்டாகி சென்றார். அது ரன் அவுட் என்பதால் ரஹ்மத் ஷாவிற்கும் அரைசதம் பறிபோனது. அதன்பின்னர் மீண்டும் ரன் அடித்து அரைசதம் எட்டினார் ரஹ்மத் ஷா.