உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணியின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது. 

உலக கோப்பை முடிந்துவிட்ட நிலையில், இந்த உலக கோப்பையின் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரும் உலக கோப்பையின் பெஸ்ட் லெவன் வீரர்களை தேர்வு செய்திருந்தார். இந்நிலையில் ஐசிசியும் தேர்வு செய்துள்ளது. 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மா தான் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர். 648 ரன்களை குவித்த ரோஹித்தையும் இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்த ராயையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. 

மூன்றாம் வரிசை வீரராக கேன் வில்லியம்சனையும் நான்காம் வரிசை வீரராக ஜோ ரூட்டையும் தேர்வு செய்துள்ளது. வில்லியம்சன் 578 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். ரூட்டும் உலக கோப்பையில் அபாரமாக ஆடினார். ஆல்ரவுண்டர்களாக ஷகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. 

ஷகிப் அல் ஹசனுக்கு இந்த உலக கோப்பை சிறப்பானதாக அமைந்தது. 8 போட்டிகளில் 606 ரன்கள் அடித்ததோடு 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றதற்கே பென் ஸ்டோக்ஸ் தான் காரணம். அவரைப்பற்றி இதைவிட வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. 

ஆஸ்திரேலிய அணிக்கு பின்வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடி விரைவில் ரன்களை சேர்த்து அந்த அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவி செய்தவர் அலெக்ஸ் கேரி. அலெக்ஸ் கேரி சில அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி எதிரணிகளை மிரட்டினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கூட கடுமையாக போராடினார் கேரி. கேரியை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஐசிசி தேர்வு செய்துள்ளது. 

உலக கோப்பை தொடர் முழுவதும் எதிரணிகளை தங்களது வேகத்தால் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க், ஃபெர்குசன், ஆர்ச்சர், பும்ரா ஆகிய நால்வரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளது. 

இந்த அணிக்கு ஐசிசியும் கேன் வில்லியம்சனையே கேப்டனாக தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மாவை துணை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான கோலியை இந்த லெவனில் ஐசிசி தேர்வு செய்யவில்லை. இந்த உலக கோப்பை கோலிக்கு சிறந்ததாக அமையவில்லை. 5 அரைசதங்கள் அடித்த கோலி, அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி தேர்வு செய்த 2019 உலக கோப்பை பெஸ்ட் லெவன்:

ரோஹித் சர்மா, ஜேசன் ராய், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஜோ ரூட், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஃபெர்குசன், ஆர்ச்சர், பும்ரா.