இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 

உலக கோப்பையை வென்ற உத்வேகத்திலும் தன்னம்பிக்கையிலும் ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, அந்த போட்டியில் மரண அடி வாங்கியது. முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணமாக திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித் தான். இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். 

இந்நிலையில், இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் வாங்கிய அடியில் துவண்டு போயிருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய முனைப்பில் இறங்கும். ஏனெனில் இரண்டாவது போட்டியிலும் தோற்றுவிட்டால், அது அந்த அணிக்கு மனதளவில் பெரிய அடியாக விழுந்துவிடும். 

நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஆஷஸ் தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், இந்த ஆஷஸ் தொடரை 5-0 என இங்கிலாந்தை ஸ்வீப் செய்து ஆஸ்திரேலிய அணி வெல்லும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள இயன் சேப்பல், நான் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பே சொன்னேன். இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோற்றால், அதன்பின்னர் உடைந்து நொறுங்கிவிடும் என்று கூறியிருந்தேன். ஏற்கனவே இதுமாதிரி சம்பவங்கள் நடந்துள்ளன. மழை குறுக்கீடு மட்டும் இல்லையென்றால் லார்ட்ஸ் டெஸ்ட்டில் கண்டிப்பாக இங்கிலாந்து தோற்றுவிடும்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 4 ஒருநாள் வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் கடந்த போட்டியில் ஒருநாளை கூட முழுமையாக ஆடி அணியை காப்பாற்ற முடியவில்லை. ஸ்மித்தை எப்படி அவுட்டாக்குவது என்பதே அவர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும்போது, அவர்கள் எப்படி மற்ற திட்டங்களை வகுப்பார்கள்? ஸ்மித்திற்கு கடந்த போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் சரியான லெந்த்தில் பந்துவீசவில்லை. ஸ்டூவர்ட் பிராட் மட்டும் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் நன்றாக வீசினார். ஆனால் அவர் அதை தொடரவில்லை. இங்கிலாந்து வீரர்களின் பிரச்னையே இதுதான். அவர்களால் ஒரு விஷயத்தை செய்யவே முடியாது அல்லது சரியான விஷயத்தை தொடர்ந்து செய்யுமளவிற்கு அவர்களுக்கு பொறுமை பத்தாது என்று இயன் சேப்பல் தெரிவித்தார்.