இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், இனிமேல் இந்திய அணி இந்த தொடரில் கம்பேக் கொடுக்காது; அதுவும் கோலி இல்லாத இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று மார்க் வாக், மைக்கேல் வான் ஆகிய முன்னாள் வீரர்கள் கருதினர். ஆனால் அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாண்ட விதம், நிதானம் என அனைத்து வகையிலும் மாஸ் காட்டினார் ரஹானே. களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் ஒரு கேப்டனாக சாமர்த்தியமாக ஆஸி., அணிக்கு பதிலடி கொடுத்தார். கோலி இல்லாததால் கேப்டன் பொறுப்பேற்கும் ரஹானேவிற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்போம் என்று ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சொன்னதற்கு, ஆஸி., அணியினர் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். அவர்களை நான் தடுக்கமாட்டேன் என்று  மெல்போர்ன் டெஸ்ட்டிற்கு முன் பதிலடி கொடுத்திருந்தார்.

இவ்வாறாக ஒரு கேப்டனாக களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, ரஹானேவின் கேப்டன்சி அனைவராலும் மெச்சப்பட்டது. இந்நிலையில், ரஹானே பிறவிலேயே கேப்டன் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இயன் சேப்பல், அஜிங்க்யா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட்டில் சிறப்பாக கேப்டன்சி செய்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. 2017ல் தர்மசாலாவில் நடந்த டெஸ்ட்டில் ரஹானே கேப்டன்சி செய்ததை பார்த்தவர்கள், அவரை பிறவி கேப்டன் என்று அங்கீகரித்திருப்பார்கள். 2017 டெஸ்ட்டில் செய்த கேப்டன்சியும் மெல்போர்ன் டெஸ்ட்டில் செய்த கேப்டன்சியும் ஒரே மாதிரி இருந்தது. மெல்போர்ன் டெஸ்ட்டில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானே, ஜடேஜாவுடன் இணைந்து தேவையான ரன்களை குவித்துவிட்டார். ரஹானே துணிச்சலானவர் மற்றும் ஸ்மார்ட்டானவர். ஒரு கேப்டனுக்கு தேவையான மேற்கூறிய 2 திறன்களையும் பெற்றவர் ரஹானே. தனது அணி வீரர்களின் மரியாதைக்குரியவராக திகழ்கிறார். அவர் சிறந்த கேப்டன் என்று இயன் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.