டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் மிகப்பெரிய சாதனை என்னவென்று குறிப்பிட்டு கோலியை புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல். 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். 

விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இங்கிலாந்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயித்ததில்லை என்ற விமர்சனம் இருந்தாலும், அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலகம் முழுதும் வெற்றிகளை குவித்தது. 

இந்திய அணியை நீண்டகாலத்திற்கு தொடர்ச்சியாக நம்பர் 1 இடத்தில் வைத்திருந்தார் கோலி. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது தான், கோலி ஒரு டெஸ்ட் கேப்டனாக படைத்த மிகப்பெரிய சாதனை என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மதிப்பிடுவார்கள்.

ஆனால் ரிஷப் பண்ட்டை வளர்த்துவிட்டதுதான், கோலி அவரது கேப்டன்சியில் செய்த பெரிய சாதனை என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டரும், முன்னாள் கேப்டனுமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இயன் சேப்பல், கோலி தனிப்பட்ட முறையில் ஒரு வீரராக நிறைய சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். டெஸ்ட் கேப்டனாக அவரது மிகப்பெரிய சாதனை என்னவென்றால், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை வளர்த்துவிட்டதுதான். ஒரு கேப்டனாக விராட் கோலியின் அணி தேர்வு முடிவுகள் சில சர்ச்சைக்கும் கேள்விக்கும் உரியவை. ஆனால் ரிஷப் பண்ட்டிற்கு அவர் அளித்த ஆதரவு தான் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று இயன் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அறிமுக தொடரிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த தொடரில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினாலும், பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு சதமடித்தார். இங்கிலாந்தில் சதமடித்த ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து சாதனை படைத்தார். சங்கக்கரா, கில்கிறிஸ்ட், தோனி ஆகியோர் கூட படைக்காத சாதனைகளையெல்லாம் படைத்த ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கிலும் போகப்போக திறமையை வளர்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1444 ரன்களை குவித்துள்ள ரிஷப் பண்ட் 4 சதங்கள் அடித்துள்ளார். இந்த 4 சதங்களில் 3 சதங்கள் வெளிநாடுகளில் அடிக்கப்பட்டவை.