கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலுமே ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு பெயர்போன அணி பாகிஸ்தான். ஆனால் தற்போது ஃபாஸ்ட் பவுலிங்கிலும் மோசமாக உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய பாகிஸ்தான், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தொடர்களையுமே 2-0 என இழந்தது. அடுத்த ஆண்டு டி20 தொடர் நடக்கவுள்ள நிலையில், நம்பர் 1 டி20 அணியான பாகிஸ்தான், தொடர்ச்சியாக மண்ணை கவ்விவருகிறது. 

அதுமட்டுமல்லாமல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து அசிங்கப்பட்டது. இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பியது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடிய அதே பிட்ச்சில்தான் பாகிஸ்தான் அணியும் பேட்டிங் ஆடுகிறதா அல்லது வேறு ஏதேனும் பிட்ச்சில் ஆடுகிறதா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஆடியது. 

டி20, டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலுமே பாபர் அசாம் மட்டுமே நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடினார். மற்ற அனைவருமே அனைத்து விஷயத்திலுமே சொதப்பினர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற எந்தவிதமான திட்டமும் இல்லாமல் கடமைக்கு பந்துவீசினர் என்று பாகிஸ்தான் பவுலர்களை அக்தர் சாடியிருந்தார். 

ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் போட்டியில் தோற்ற பாகிஸ்தான், வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 6வது போட்டியில் இன்னிங்ஸ் படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமான ரெக்கார்டுகளை பதிவு செய்துவருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி படுமோசமான அணி என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இயன் சேப்பல், பாகிஸ்தான் அணிக்கு இது படுமோசமான ரெக்கார்டு. கடந்த முறை பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து படுதோல்வி அடைந்தபோது, இனிமேல் பாகிஸ்தானை ஆஸ்திரேலியாவிற்கு அழைக்கக்கூடாது என்று நான் விமர்சித்தேன். எனது கருத்தைக்கேட்டு பலரும், நான் ஏதோ இல்லாததை கூறி விமர்சித்ததை போல குதித்தனர். ஆனால் இப்போது மீண்டும் அதேதான் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணி படுமோசமாக உள்ளது என்று மிகவும் நேரடியாக இயன் சேப்பல் கடுமையாக விமர்சித்துள்ளார்.