பிக்பேஷ் லீக் தொடரின் இன்றைய போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸும் மெல்போர்ன் ஸ்டார்ஸும் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஃபீலிடிங்கை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, டேவிட் மாலனின் அதிரடி அரைசதத்தால்(75) 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது. 

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர் பென் மெக்டெர்மோட் மந்தமாக ஆடி 35 பந்தில் 31 ரன்கள் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் டார்ஷி ஷார்ட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய டேவிட் மாலன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 56 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்தார் டேவிட் மாலன். அவருடன் இங்ராமும் அடித்து ஆடி 12 பந்தில் 26 ரன்களை விரைவாக அடித்ததால், 20 ஓவரில் ஹரிகேன்ஸ் அணி 164 ரன்கள் அடித்தது.

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில், கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல்லை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஓபனிங்கில் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 பந்தில் வெறும் 7 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பூரான் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஒருமுனையில் வெளியேறிக்கொண்டிருக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் மேக்ஸ்வெல், 28 பந்தில் அரைசதம் அடித்தார். 37 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து மேக்ஸ்வெல் 14வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்க, அவர் ஆட்டமிழந்த பின்னர் எஞ்சிய 7 ஓவர்களில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெறும் 32 ரன்கள் மட்டுமே அடித்து 143 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 21 ரன்கள் வித்தியாசத்தில் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.