உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. முதல் காலிறுதி போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

2வது காலிறுதி போட்டி அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இமாச்சல பிரதேச அணியில் தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா வெறும் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான அபிமன்யூ ராணா 28 ரன்களும், நிதின் ஷர்மா 26 ரன்களும் அடித்தனர். கேப்டன் ரிஷி தவான் ஒரு முனையில் நிலைத்து நின்றுகொண்டிருக்க, மறுமுனையில் அனைவரையுமே வீழ்த்தினர் தமிழ்நாடு பவுலர்கள். ரிஷி தவான் 35 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவரில் இமாச்சல பிரதேச அணி வெறும் 135 ரன்கள் மட்டுமே அடித்தது. தமிழ்நாடு அணி சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

136 ரன்கள் என்பது தமிழ்நாடு அணிக்கு எளிய இலக்குதான் என்பதால், தமிழ்நாடு அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி.