தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2 தருணங்கள் மிக முக்கியமானவை. அவை இரண்டும் தான் ஆட்டத்தின் திருப்புமுனைகளாக அமைந்தன. 

சவுத்தாம்ப்டனில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடியை நிலைக்கவிடாமல் ஆரம்பத்திலேயே பும்ரா வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் டுபிளெசிஸும் வாண்டெர் டசனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க, அதை உடைத்து பிரேக் கொடுத்தார் சாஹல்.

வாண்டெர் டசனை 22 ரன்களிலும் அதே ஓவரில் டுபிளெசிஸை 38 ரன்களிலும் வீழ்த்தி, இந்திய அணியை ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார் சாஹல். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முயலும்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தார் சாஹல். 8வது விக்கெட்டுக்கு மோரிஸும் ரபாடாவும் இணைந்து சிறப்பாக ஆடி 66 ரன்களை சேர்த்ததன் விளைவாக தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் எடுத்தது. 

முதல் திருப்புமுனை:

டுபிளெசிஸ் - வாண்டெர் டசன் ஜோடியை 19வது ஓவரில் சாஹல் பிரித்தார். அந்த ஓவரில் இருவரையுமே வீழ்த்தினார் சாஹல். அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அந்த ஜோடியை பிரிக்காமல் விட்டிருந்தால் தென்னாப்பிரிக்க அணி நல்ல ஸ்கோரை எட்டியிருக்கும். நல்ல வேளையாக அந்த ஜோடியை பிரித்ததோடு மட்டுமல்லாமல் ஓரே ஓவரில் இருவரையும் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சாஹல். 

தென்னாப்பிரிக்க அணி 227 ரன்களை குவித்ததை அடுத்து 228 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. அதனால் பேட்டிங்கிற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது. ஸ்கோர் குறைவு என்பதால் அவசரப்படாமல் நிதானமாக ஆடினாலே போதும் என்பதை உணர்ந்த ரோஹித் சர்மா அவசரப்படாமல், கண்டிஷனை மதித்து சிறப்பாக ஆடினார். 

ரோஹித் ஒருமுனையில் அதிரடியாக ஆட, ராகுலும் 26 ரன்களில் வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ரோஹித் சர்மாவை தென்னாப்பிரிக்க பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. ரபாடா, இம்ரான் தாஹிர், ஷாம்ஸி, மோரிஸ், ஃபெலுக்வாயோ ஆகியோர் மாறி மாறி வீசியும் ரோஹித்தை வீழ்த்த முடியவில்லை. ராகுலுக்கு அடுத்து தோனியும் அவுட்டான நிலையில், அபாரமாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

இந்திய அணியின் பலமே டாப் 3 பேட்ஸ்மேன்கள் தான். டாப் 3ல் தவானும் கோலியும் ஆட்டமிழந்துவிட்ட நிலையில், கடைசிவரை தான் களத்தில் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ரோஹித் சர்மா, அந்த பணியை செவ்வனே செய்தார். ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்துக்குள் வந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. 

ரோஹித் சர்மா களத்திற்கு வந்ததும் தொடக்கத்தில் சில ஓவர்களில் திணறினார். அப்போதே அவரை வீழ்த்தியிருக்க வேண்டும். ரபாடா வீசிய 2வது ஓவரின் நான்காவது பந்தை நல்ல பவுன்சராக வீசினார். அந்த பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனதால் திணறினார் ரோஹித். பந்து எட்ஜ் ஆகி காற்றில் இருந்தது. ஸ்லிப்பில் நின்றிருந்த டுப்ளெசிஸ் வேகமாக ஓடிவந்து பந்தை நெருங்கி, பந்தை ஏறக்குறைய பிடித்தும் விட்டார். ஆனால் சரியாக பிடிக்காமல் கோட்டைவிட்டார். அந்த கேட்ச்சை கொஞ்சம் தெளிவாக பிடித்திருக்கலாம். அதுபோன்ற கடினமான கேட்ச்களை பிடிப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால் அதை டுப்ளெசிஸ் விட்டுவிட்டார். அதன்பின்னர் வாய்ப்பே கொடுக்காத ரோஹித் சர்மா, தெளிவாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

2வது திருப்புமுனை:

ரோஹித் சர்மாவின் கேட்ச்சை டுபிளெசிஸ் தவறவிட்டதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதுதான் ஆட்டத்தின் இரண்டாவது மற்றும் முக்கியமான திருப்புமுனை.