ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் கிரிக்கெட் தொடர், உலக கோப்பைக்கு முந்தைய இந்திய அணியின் கடைசி தொடர். எனவே இந்த தொடரை உலக கோப்பைக்கான அணி தேர்வில் பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க பயன்படுத்தப்படுகிறது. 

ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் சரியான வீரர்களை மட்டும் உலக கோப்பைக்கு எடுக்கும் முயற்சி நடந்துவருகிறது. உலக கோப்பையில் தோனியை தவிர மாற்று விக்கெட் கீப்பர் ஒருவரை தேர்வு செய்யும் சோதனை முயற்சிகள் நடந்துவருகின்றன. அந்த மாற்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? என்பதுதான் கேள்வி. 

இந்திய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகள், கேப்டன் கோலியின் பேச்சு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட வாய்ப்பில்லை. அதேநேரத்தில் விஜய் சங்கருக்கான வாய்ப்பு இன்னும் இருக்கவே செய்கிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கியது. எனவே இரண்டாவது போட்டியில் கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சனுடன் களமிறங்கும். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு விஜய் சங்கர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் இல்லை என்பதால் அவரது ஆட்டத்திறனை டி20 போட்டியில் மட்டுமே பரிசோதிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தோனிதான் உலக கோப்பையில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பது உறுதியாகிவிட்டது. எனவே மாற்று விக்கெட் கீப்பருக்கான தேர்வு பரிசீலனையில் இருக்கும் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இரண்டாவது போட்டியில் ஆடலாம். தோனி எப்படியும் உலக கோப்பையில் ஆடத்தான் போகிறார் என்பதால் அவருக்கு ஓய்வளித்துவிடலாம் என்பது முன்னாள் வீரர் ஹேமங் பதானியின் கருத்து. 

தோனியை நீக்கிவிட்டு விஜய் சங்கரை அணியில் சேர்க்கலாம் என்று ஹேமங் பதானி கருத்து தெரிவித்துள்ளார். ஹேமங் பதானி 2001 முதல் 2004ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடினார். மேலும் ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இரண்டு சீசன்களில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.