2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. அந்த போட்டியில், பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் ஃபகார் ஜமான், இளம் வீரரின் அதிரடி சதத்தால்(114) ஐம்பது ஓவரில் 338 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

339 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவை டக் அவுட்டாக்கி அனுப்பிய முகமது ஆமீர், விராட் கோலியை ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார். முக்கியமான வீரர்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே அவுட்டானதால், 72 ரன்களுக்கே ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா வெறித்தனமாக அடித்து ஆடினார். சிக்ஸர்களை விளாசி தள்ளிய ஹர்திக் பாண்டியா, 43 பந்தில் 76 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் வெறும் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து, 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பவுலிங்கில் அசத்திய முகமது ஆமீர் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த வெற்றி குறித்து பேசியுள்ள ஹசன் அலி, சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை நினைத்தால் இப்போது கூட உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. புதிய கேப்டனான சர்ஃபராஸ் அகமது தலைமையில் இளம் வீரர்கள் நிறைந்த பாகிஸ்தான் அணி, வலுவான இந்திய அணியை வீழ்த்தியது சிறப்பான உணர்வு என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.