இந்திய அணியில் ரோஹித், கோலிக்கு நிகராக ஷிகர் தவான் முக்கியமான வீரர் எனவும் அவரை எல்லாம் ஓரங்கட்டக்கூடாது எனவும் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி திகழ்ந்துவருகிறது. இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடக்க வீரர்களாக ஆடிவருவதால் அவர்களுக்கு இடையேயான புரிதல் அபாரமாக இருப்பதால், அது அவர்களது ஆட்டத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. 

தற்போதைய சூழலில் உலகின் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி திகழ்ந்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுலை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கலாமா என்ற விவாதங்கள் நடந்துவருகின்றன. 

உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால், உலக கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் ஆடவில்லை. அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடிய தவான், ஃபார்மில் இல்லாமல் அனைத்து போட்டிகளிலுமே சொதப்பினார். 3 டி20 போட்டிகளில் ஆடி மூன்றிலும் சேர்த்தே வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்தார். அதேபோல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் 2 ரன்னும் மற்றொரு போட்டியில் 36 ரன்கள் மட்டுமே அடித்தார். 5 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட தவான் அடிக்கவில்லை. 

எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தவானுக்கு பதிலாக ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுலை இறக்குவது குறித்த பேச்சுகள் உலாவருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், இந்திய கிரிக்கெட் கண்ட சில சிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் தவானும் அடங்குவார்கள். ரோஹித் - தவான் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஜோடிகளில் ஒன்று. ரோஹித் - கோலியின் பங்களிப்பு எப்படி இந்திய அணிக்கு முக்கியமோ அந்தளவிற்கு தவானின் பங்களிப்பும் முக்கியமானது. டி20, ஒருநாள் ஆகிய இரண்டிலுமே தவான் அபாரமான வீரர். எனவே என்னை பொறுத்தமட்டில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறங்குவதற்கு தவானைவிட சிறந்த வீரர் தற்போதைய இந்திய அணியில் இல்லை என்று தவானுக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.