Asianet News TamilAsianet News Tamil

ஐயா என்னை ஃபீல்டிங் பண்ணவிடாம தொந்தரவு பண்றான்! பொல்லார்டு அப்பீலை ஏற்று அவுட் கொடுத்த அம்பயர்; சர்ச்சை வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்ய விடாமல் தொந்தரவு செய்ததாக இலங்கை வீரர் குணதிலகாவிற்கு அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
 

gunathilaka controversial wicket video
Author
Antigua and Barbuda, First Published Mar 12, 2021, 3:37 PM IST

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

ஆண்டிகுவாவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி,49வது ஓவரில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஷாய் ஹோப்பின் சதம்(110) மற்றும் எவின் லூயிஸின் அரைசதம்(65) ஆகியவற்றால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இலங்கை தொடக்க வீரர் குணதிலகா சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்டார். இலங்கை இன்னிங்ஸின் 22வது ஓவரை பொல்லார்டு வீசினார். அந்த ஒவரின் முதல் பந்தை குணதிலகா தடுப்பாட்டம் ஆட, பந்து அவரது காலுக்கு கீழே விழுந்தது. அதற்கு அவரும் மறுமுனையில் இருந்த நிசாங்காவும் ரன் ஓட முயன்றனர். அதற்கு ரன் ஓட முடியாது என்று தெரிந்ததால் குணதிலாக சும்மா ஓடுவது போல் ஏய்ப்புதான் காட்டினார். ஆனால் நிசாங்காவோ பாதி தூரம் ஓடிவந்தார். பேட்ஸ்மேன் ஓட முயன்றாலே, பவுலர்கள் விரைந்து சென்று பந்தை எடுப்பது வழக்கம்தான். அதைத்தான் பொல்லார்டும் செய்ய முயன்றார்.

ஆனால் குணதிலகா பந்தை காலால் தட்டிவிட்டார். பந்தை தட்டிய குணதிலகா, தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல கைகளை உயர்த்தினார். ஆனால் அந்த பந்தை எடுத்து மறுமுனையில் ஓடிவந்த நிசாங்காவை அவுட் செய்ய முயன்றார் பொல்லார்டு. அதனால், குணதிலகாவின் செயலில் அதிருப்தியடைந்த பொல்லார்டு, கோபத்தில் அம்பயரிடம் முறையிட, விவகாரம் தேர்டு அம்பயரிடம் சென்றது. தேர்டு அம்பயர், “Obstructing the field" என்ற முறையில் ஃபீல்டரை தொந்தரவு செய்ததாக குணதிலகாவிற்கு அவுட் கொடுத்தார்.

கிரிக்கெட் ரசிகர்கள் இந்த சர்ச்சையான அவுட்டை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கு எதிரான முடிவு என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். 

ஃபீல்டிங்கிற்கு இடையூறாக இருந்ததாக இதற்கு முன் இதேபோலவே பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா(1987), இந்திய முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத், இன்சமாம் உல் ஹக் உள்ளிட்ட சிலர் அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios