இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமைத்துவ பண்புகளை பெற்ற சிறந்த தலைவர் என்பதும் சிறந்த நிர்வாகி என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இக்கட்டான சூழலில், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இந்திய அணியை உலகின் சிறந்த அணியாக உருவாக்கி தலைநிமிர வைத்தவர்.

கங்குலியின் நிர்வாகத்திறமை பல நேரங்களில் இந்திய கிரிக்கெட்டிற்கு உதவியிருக்கிறது. தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருந்துவரும் கங்குலி, இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். 

இந்நிலையில், ஐசிசி(சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்)-யின் தலைவராவதற்கு தகுதியானவர் கங்குலி என்றும், அவரால்தான் சர்வதேச கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும் எனவும் க்ரேம் ஸ்மித் உறுதியாக நம்புகிறார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநருமான க்ரேம் ஸ்மித்,  கொரோனாவிலிருந்து மீண்டபிறகு, சர்வதேச கிரிக்கெட்டை வழிநடத்த வலிமையான தலைவர் தேவை.  தற்கால கிரிக்கெட்டுடன் நெருக்கமான தொடர்புடையவராகவும், தலைமைத்துவ பண்புகளை கொண்ட சிறந்த நிர்வாகியாகவும் இருக்கக்கூடிய ஒருவர் ஐசிசியின் தலைவரானால் தான் கிரிக்கெட்டை மேம்படுத்த முடியும். அதனால் சரியான மற்றும் தகுதியான ஒருவர் ஐசிசி-யின் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும். அது கங்குலி தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று க்ரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.