ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதால், பயிற்சிக்காக போலந்து செல்லவிருந்த கோமதி மாரிமுத்துவின் பயணம் ரத்தாகிவிட்டது. தோஹாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். 

கோமதி மாரிமுத்துவிற்கு போட்டியின் போது எடுக்கப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட பரிசோதனை முடிவில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்ட்ரோலோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை அவர் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

ஆனால் தனது வாழ்வில் தான் ஊக்கமருந்து உட்கொண்டதே இல்லை என்று கோமதி மாரிமுத்து தன்மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தனது “B” மாதிரியையும் பரிசோதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கிடையே கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

B மாதிரியை பரிசோதித்து அதிலும் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால், அவருக்கு நான்காண்டுகள் தடை விதிக்கப்படும். தோஹாவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றதால் கோமதியை 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்திய தடகள சம்மேளனம் செய்திருந்தது. அதற்காக சக வீராங்கனைகளுடன் போலந்து சென்று பயிற்சியில் ஈடுபட இருந்தார் கோமதி. ஆனால் அதற்குள் ஊக்கமருந்து சர்ச்சை வெடித்ததால் அவரது போலந்து பயணம் ரத்தானது. 

முதற்கட்ட சோதனையில்தான் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்திருப்பதால், B மாதிரியை பரிசோதிக்க வேண்டும் என்று கோமதி கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் அதையும் பரிசோதித்து அதிலும் உறுதியானால் தான் கோமதிக்கு நான்காண்டு தடை விதிக்கப்படும். ஒருவேளை B மாதிரி பரிசோதனை கோமதிக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் கோமதி மீதான இடைக்காலத்தடை ரத்து செய்யப்படும்.